Published:Updated:

புனே பிட்ச் பராமரிப்பாளர் சஸ்பெண்ட் பின்னணி என்ன? #OperationCricketGate

புனே பிட்ச் பராமரிப்பாளர் சஸ்பெண்ட் பின்னணி என்ன? #OperationCricketGate
புனே பிட்ச் பராமரிப்பாளர் சஸ்பெண்ட் பின்னணி என்ன? #OperationCricketGate

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேசன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. மைதான பராமரிப்பாளர் பாண்டுரங் சல்கோன்கர், பெயர் குறிப்பிடப்படாத இரண்டு பெளலர்களுக்குச் சாதகமாக பிட்ச்சை தயார் செய்யப்போவதாகக் கூறியதாக வெளியாகியுள்ள வீடியோ, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட முறையில் ஒரு வீரருக்குச் சாதகமாக இருக்கும் வகையில் பிட்ச் உருவாக்குவது ஐ.சி.சி விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, தகவல் அறிந்து உடனடியாக விசாரணையில் இறங்கிய பி.சி.சி.ஐ, பாண்டுரங் சல்கோன்கரை சஸ்பெண்ட் செய்தது. அத்துடன், அடுத்த உத்தரவு வரும் வரை மைதானத்துக்குள் நுழையவும் தடைவிதித்தது. இந்தத் தகவலை பி.சி.சி.ஐ தலைவர் சி.கே.கண்ணா (பொறுப்பு) உறுதிப்படுத்தினார். "மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் அபே ஆப்தே, பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு நீரஜ் குமார் ஆகியோர் விரைவில் இந்தப் பிரச்னையில் விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும். அதுவரை, மும்பை வான்கடே மைதான பராமரிப்பாளர் ரமேஷ் மமுன்கர் பொறுப்பேற்பார்’’ என்றார் சி.கே.கண்ணா.

போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், 'இந்தியா டுடே' டிவி இந்தச் செய்தியை வெளியிட்டது. பரபரப்பான இந்தச் செய்தியால் போட்டி நடக்குமா, நடக்காதா என விவாதம் எழுந்தது. 'இந்தியா டுடே' டிவி நடத்திய ஆபரேஷனில், நிருபர்கள் இருவர் புக்கிகள் போர்வையில், மைதான பராமரிப்பாளரிடம் பேச்சுக் கொடுத்தபோது, சல்கோன்கர் விஷயத்தை உளறிவிட்டார். தங்களை புக்கிகள் என அடையாளப்படுத்திக் கொண்ட நிருபர்கள், சல்கோன்கரிடம் புனே மைதானத்தின் பிட்ச் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் "பிட்ச் நன்றாக உள்ளது. அநாயசமாக 337 ரன்கள் குவிக்கலாம். அதேபோல, இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி 337 ரன்களை சேஸ் செய்ய முடியும்" என்றார். 

பிட்ச் தயாரிக்கும்போது வேற்று ஆட்களுக்கு அனுமதி உண்டா என நிருபர் கேட்க, “அனுமதி இல்லை. ஆனால், நாங்கள் அனுமதிக்கிறோம். பி.சி.சி.ஐ கண்காணிப்பாளர் ஒருவர்கூட இருக்கிறார்” என பதில் சொன்னார். அவர் பெயர் என்னவென நிருபர் கேட்டனர். மமுன்கர் எனப் பதில் வந்தது. ஆம், புனே பிட்சை பராமரிக்க பி.சி.சி.ஐ-யால் தற்காலிகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் அதே மமுன்கர்தான். மைதானத்தில், போட்டியின் முந்தைய நாளன்று யாரும் நுழைய முடியாது. அப்படியிருக்கையில், அவர்கள் எப்படி சாதாரணமாக நுழைய முடிந்தது? அதுவும் ஒரு கிரிக்கெட் வாரியக் கண்காணிப்பாளர் இருக்கும்போது... அதுமட்டுமன்றி முதல்முறையாக அறிமுகம் ஆகும் ஒருவரிடம், மைதானத்திலும் சரி, காருக்குள்ளும் சரி, சல்கோன்கரால் எப்படி அவ்வளவு கேசுவலாக பேச முடிந்தது? அப்படியெனில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றனவா?

337 ரன்களை இரண்டாவது பேட் செய்யும் அணி சேஸ் செய்துவிடும் என்று சல்கோன்கர் கூறுகிறார். இந்த ஜனவரி மாதம் நடந்த ஒருநாள் போட்டியின்போது, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 350 ரன்கள் குவித்தது. அதை சேஸ் செய்த இந்திய அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் அந்த இமாலய இலக்கை சேஸ் செய்தது. இந்தப் போட்டியும் இதேபோல் ஏதேனும் புக்கிகளின் வேண்டுகோளுக்காகப் பேட்டிங்குக்குச் சாதகமாக மாற்றப்பட்டதா? இதுவும் விசாரிக்கப்படவேண்டியது அவசியம்.

சல்கோன்கர் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறை அல்ல. இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது, பிட்ச் மோசமாக தயாரிக்கப்பட்டதாக ஐ.சி.சி மேட்ச் ரெஃப்ரி கிறிஸ் பிராட் குற்றம்சாட்டி இருந்தார். 3-வது நாள் டீ பிரேக் முடிந்து, சில நிமிடங்களிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாளிலிருந்தே பிட்ச், சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவே அமைந்திருந்தது. 29 விக்கெட்டுகளைச் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். இரு அணியின் டாப் பேட்ஸ்மேன்களால் கூட, பந்தை சரிவரக் கணிக்க முடியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தது பிட்ச். ஆக, சல்கோன்கரிடம் விசாரணை நடக்கும்போது, இந்தப் போட்டியைப் பற்றியும் விசாரிக்கப்படலாம். 

இரண்டு ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்த இந்திய கிரிக்கெட் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.  நடந்தவற்றையெல்லாம் பார்க்கும்போது, ஆடுகளப் பராமரிப்பாளருக்கு மட்டும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. பிட்ச் வீரர்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டது நிரூபிக்கப்பட்டால், வீரர்களின் பக்கம் விசாரணை திரும்பும். கிரிக்கெட் அரங்கில் இதோ புதிதாய் ஒரு பூதம் கிளம்பிவிட்டது. இது எத்தனை பேரை விழுங்குமோ?