
சென்னை அணியின் பெரிய ப்ளஸ் - மைனஸ் இரண்டுமே அணி நிர்வாகம் பரீட்சார்த்த முயற்சிகளை எடுப்பதே இல்லை என்பதுதான் - இது விமர்சகர்களின் கூற்று.
‘புலியை நாம கண்ணுல பார்க்கணும்னு இல்ல. அது இருக்குங்குற நினைப்பே நமக்குக் காட்டுமேல தனி மரியாதையைக் கொண்டுவரும்’ என்பார்கள் பழங்குடிகள். கிரிக்கெட்டில் தோனியின் இருப்பும் அப்படித்தான். ஓய்வு என்றானபின் ‘இனி இங்கே மட்டுமே அவரைப் பார்க்கமுடியும்’ என்பதால் கேள்விகளோடு, எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தது கிரிக்கெட் உலகம்.
ரெய்னா, ஹர்பஜன் இல்லாதது, கொரோனாத் தொற்று போன்ற பல காரணங்கள் சென்னை அணியின் மனதைக் குலைக்கக்கூடிய பலவீனங்களாக விமர்சகர்களால் பட்டியலிடப்பட்டன. அதில் முக்கியமான ஒன்று, ‘அணியின் முக்கிய வீரர்கள் கடைசியாக விளையாடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது’ என்பது. தோனி, வாட்சன், ராயுடு போன்றவர்கள் மட்டுமல்ல, இளைஞரான தீபக் சஹார்கூட கடைசியாக டிசம்பரில்தான் ஆடியிருந்தார். ‘ஒரு வருட காலம் கிரிக்கெட் ஆடவில்லை. அதிலும் கடந்த ஆறு மாதங்களாக சுத்தமாக பயிற்சிகூட இல்லை’ என்பதால் சென்னை ரசிகர்களுக்கே அணியின் பார்ம் மீது கொஞ்சம் சந்தேகம்தான்.

ஆனால் முதல் மேட்ச் டாஸின்போது புஜம் தெறிக்க இறுக்கமாய் டிஷர்ட் போட்டுவந்த தோனியைப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்தார்கள் ரசிகர்கள். ‘பார்க்கவே பிரமாண்டமா இருக்கீங்க, இப்படிப் பார்த்ததே இல்லையே’ என முரளி கார்த்திக் கேட்டதற்கு, ‘கிரிக்கெட் ஆடமுடியாது, சரி, பிட்னஸ்ல கவனம் செலுத்துவோம்னு ரெடி ஆனதுதான் இப்படி’ என்றார் தோனி. 39 வயதிலும் இந்த மெனக்கெடல்தான் அவரை இன்னமும் கொண்டாட வைத்துக்கொண்டே இருக்கிறது.
சென்னை அணியின் பெரிய ப்ளஸ் - மைனஸ் இரண்டுமே அணி நிர்வாகம் பரீட்சார்த்த முயற்சிகளை எடுப்பதே இல்லை என்பதுதான் - இது விமர்சகர்களின் கூற்று. சீக்கிரமே ஐ.பி.எல்லிலும் ஓய்வு பெறக்கூடும் என்பதால் அதற்குள் தன்னைப் பின்பற்றும் ஒரு டீமை இந்தமுறை செட் செய்துவிடுவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள் எல்லாரும். ருத்துராஜ் கெய்க்வாட் பெயரும் அதனால்தான் நிறைய அடிபட்டது. ஆனால் முதல் மேட்ச்சில் சாம் கர்ரனைத் தவிர மீதி அனைத்துத் தேர்வுகளுமே எதிர்பார்க்கப்பட்டதுதான். சாம் எடுக்கப்பட்டதும் பிராவோ முழு உடற்தகுதியோடு இல்லையென்பதால்தான்.
முதல் ஆட்டத்திலேயே தன் வெயிட்டை நிரூபித்தார் கர்ரன். முரளி விஜய்யை மீண்டும் ஓப்பனிங் ஆடவிடுவது, ஜடேஜாவை பேட்டிங் ஆர்டரில் புரமோட் செய்வது என தன் ட்ரேடுமார்க் சர்ப்ரைஸ்களை இந்த ஆட்டத்திலும் கொண்டுவந்தார் தோனி. விளைவு - சென்னை அணிக்குக் கேப்டனாகத் தன் 100-வது வெற்றியைப் பதிவு செய்தார். ஒரே அணிக்குக் கேப்டனாக 100 வெற்றிகளை ஒருவர் பதிவு செய்வது இதுவே முதல்முறை. இந்தச் சாதனையை முறியடிக்கும் கொஞ்சநஞ்ச வாய்ப்பும் ரோகித் ஷர்மா என்ற ஒரே ஒரு கேப்டனுக்கு மட்டும்தான் சாத்தியம். அவர் கணக்கு 60 வெற்றிகள். இன்னும் நாற்பது வெற்றிகள் பெற அவர் குறைந்தது நான்கு சீசன்கள் ஆடவேண்டும். 33 வயதாகும் அவர் இன்னும் நான்கு ஆண்டுகள் இதே உடற்தகுதியோடு கேப்டனாக இருப்பாரா என்பது சந்தேகமே.
இதுபோக ஐ.பி.எல்லில் அதிக ஸ்டம்ப்பிங்குகள், அதிக மேட்சுகள் கேப்டனாக விளையாடியது என தோனிக்கு பர்சனலாகவும் ஏகப்பட்ட ரெக்கார்டுகள். இவை முறியடிக்கப்படுமா என்பதும் சந்தேகமே. சுற்றிலும் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருந்தபொழுதில் ஒரு சின்னக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது ஐ.பி.எல். அதற்குத் தன் ஸ்டைலில் முன்னுரை எழுதியிருக்கிறார் தோனி. இன்னும் குறைந்தது ஒரு சீசனாவது அவர் ஆடுவார் என்பதால் சென்னை அணி நிர்வாகமும் ரசிகர்களும் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் வார்த்தைகள் இவைதான். ‘தலைவன் இருக்கிறான்.’
வெல்கம் பேக் தோனி!